×

மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு இருந்தும் துணிச்சலுடன் கூல்டிரிங்ஸ் பாட்டிலில் அடைத்து நூதன முறையில் சாராயம் விற்பனை: 3 வடமாநில பெண்கள் கைது; 35 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

சென்னை: மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 40 பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து மெரினா கடற்கரை மணல் பரப்பில் புதைத்து வைத்து, விற்பனை செய்வதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படையினர் மெரினா கடற்கரை பகுதியில் ரகசியமாக பொதுமக்கள் போல் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 3 வடமாநில பெண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மெரினா மணல் பரப்பில் புதைத்து வைத்திருந்த கேன் ஒன்றை வெளியே எடுத்தனர். இதை பார்த்த தனிப்படையினர் உடனே விரைந்து சென்று மணல் பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட கேனை திறந்து பார்த்த போது, அதில் 35 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது.

உடனே 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுனந்தா, ஷில்பா போஸ்லே, ஜென்துஸ் கோஸ்லயா என தெரியவந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் சாராயத்தை கடத்தி வந்து, அதை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் புதைத்து வைத்து, இரவு நேரத்தில் மெரினா மணல் பரப்பில் தூங்கும் முதியவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் பகல் நேரத்தில் கூலி வேலைக்கு செல்வதும், இரவு நேரத்தில் சாராய விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், வெளியில் யாருக்கும் சந்தேகம் வராதபடி பழைய ‘கூல்டிரிங்ஸ்’ பாட்டில்களை விலைக்கு வாங்கி வந்து, அதில் சாராயத்தை நிரப்பி ஒரு பாட்டில் ரூ.50க்கும் விற்பனை செய்து வந்துள்ளனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து. போலீசார், 3 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Marina Beach , Police in Marina Beach bravely seal a bottle of Cooldrinks and sell it in a modern way: 3 North Indian women arrested; Seizure of 35 liters of kerosene
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்